தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சட்டக்கல்லூரி மாணவி

2 mins read
d3f0ddee-a77a-48c0-a39a-693e43d83908
குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். - படம்: ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இம்முறை சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான அந்த மாணவியை, 19, 20 வயதான சட்டக்கல்லூரி மாணவர்கள் இருவரும் கல்லூரி ஊழியரான மனோஜித் மிஷ்ரா என்பவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அப்போது, அந்தக் கொடூரத்தைக் காணொளியாகப் பதிவு செய்ததுடன், அது குறித்து யாரிடமும் பேசக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தெற்கு கோல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி, இரவு 7 மணி முதல் 10 மணி வரைக்குள் நடந்திருப்பதாக அந்த மாணவி தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாக்கி மட்டையால் தாக்கியதுடன், மாணவியின் காதலரைக் கொன்றுவிடப் போவதாகவும் மனோஜித் மிஷ்ரா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பதிவு செய்த காணொளியை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டப்பட்டதை அடுத்து, வீடு திரும்பிய பின்னர் தமக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார் அந்த மாணவி.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

“என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ள மனோஜித் முயற்சி செய்தார். அவரைத் தடுக்கப் போராடியதுடன், கதறி அழுதேன். அவர் காலில் விழுந்து கெஞ்சியதுடன், எனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும் சொன்னேன். ஆனால், அவர் எதையும் ஏற்கவில்லை,” என்று மாணவி தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நியூஸ் 18 ஊடகச் செய்தி தெரிவித்தது.

மூவரும் கல்லூரியின் பிரதான வாயிற்கதவை மூடிவிட்டனர் என்றும் அங்கிருந்த காவலாளியால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

கோல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்