புதுடெல்லி: சட்டவிரோதமாக எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவும் யாருக்காகவும் சட்டம் வளையாது என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் எதிர்பார்க்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
காவல்துறையினரின் காவலில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் ஐந்து பேர் மாயமாகிவிட்ட நிலையில், அவர்களைக் கண்டுபிடித்து நாடு கடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வழக்கு மீதான விசாரணையின்போதே தலைமை நீதிபதி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
“அகதிகள் முதலில் சட்டவிரோதமாக எல்லை கடந்து ஊடுருவுகிறார்கள். சுரங்கம் தோண்டி அல்லது வேலியைக் கடந்து உள்ளே வருபவர்கள், அதன் பிறகு இந்தியச் சட்டம் எங்களுக்கும் பொருந்த வேண்டும் என்கிறார்கள்.
“தங்களுக்கும் உணவு, தங்குமிடம் கிடைப்பதற்கான உரிமை உண்டு என்றும் குழந்தைகளுக்கு கல்வி பெறத் தகுதி உண்டு என்றும் நினைக்கிறார்கள். அவர்களுக்காக சட்டம் வளைய வேண்டுமா?” என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கோபத்துடன் சில கேள்விகளை எழுப்பினார்.
இந்தியாவிலும் ஏழைக் குடிமக்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர் சலுகைகளும் இதர பலன்களும் அந்த குடிமக்களுக்கு பொருந்தாதா? என்றும் கேட்டார்.
ஓர் அகதிக்கு சட்டபூர்வ அந்தஸ்து இல்லாமல்போகும் பட்சத்தில் சட்டவிரோதமாக ஊடுருபுவர்களை இந்தியாவிலேயே வைத்திருக்க முடியுமா? என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள பங்ளாதேஷ், ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக் கண்டறிந்து, நாடு கடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கேற்ப, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள பல போலி அடையாள ஆவணங்களைக் கள்ளச்சந்தையில் பெற்றுள்ளனர். ஒருசிலர் சொந்த வீடு கட்டி, வசதியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

