சண்டிகர்: கனடாவின் தற்காப்பு அமைச்சர், ராணுவம், காவல் துறைக்குச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் மிரட்டல் கடிதம் அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தங்கள் கும்பலில் 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், காவல் துறையினரைவிட அதிக துப்பாக்கிகளும் இருப்பதாக அக்கும்பல் அனுப்பியதாகக் கூறப்படும் மிரட்டல் கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாகி உள்ளது.
கனடா காவல் துறையின் புலனாய்வுக் கோப்புகளிலிருந்து பெறப்பட்ட அந்தக் கடிதத்தில், பிஷ்னோய் கும்பல், கனடாவில் சட்டவிரோதப் பணம்பறிப்பு, துப்பாக்கிச் சூடு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நாடு கடத்த உத்தரவிடப்பட்ட பிஷ்னோய் கும்பலின் தொடர்பாளரின் விசாரணை தொடர்பான ஆவணங்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் பெறப்பட்டபோது இந்தக் கடிதம் வெளிச்சத்துக்கு வந்தது.
கனடாவில் ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ உள்ளிட்ட பல நகரங்களில் துப்பாக்கிச் சூடு, மிரட்டல் வழக்குகளில் தொடர்புடைய அமிதோஸ் பஜ்வா, சாஹிப்ஜோத் சிங் ஆகிய இருவரை அண்மையில் கனடா எல்லைச் சேவைகள் முகமை அடையாளம் கண்டது.
அப்போட்ஸ்ஃபோர்டு காவல் துறைக்கு அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் கடிதத்தில், “நாங்கள் உங்களுக்கு எழுத்துபூர்வமான எச்சரிக்கையும் சவாலும் விடுக்கிறோம். எங்களைத் தடுக்கக் கனடாவுக்குத் துணிச்சல் இல்லை. நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த இந்தியக் கும்பல். கனடாவில் எங்களுக்கு 5,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். $1,000 டாலருக்காக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். விரைவில் நாங்கள் கனடாவைக் கைப்பற்றுவோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கரம்வீர் சிங் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐவர் நாடு கடத்தப்பட்டனர்.
அனைத்துலக மாணவர் விசா, வேலை அனுமதிப் பத்திரங்கள் மூலம் கனடாவிற்கு வரும் இந்திய இளைஞர்களை இத்தகைய குற்றக் கும்பல்கள் தங்களின் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தி வருவதாகக் கனடாவின் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக 2019 முதல் 2023 வரை கல்வி விசா மூலம் வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஷ்னோய், பம்பிஹா போன்ற குற்றக் கும்பல்கள் தெற்காசியச் சமூகத்தினரைக் குறிவைத்து நடத்தும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த கனடாவின் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
