கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞரான எஸ். ரங்கசாமி, நீதிபதியிடம் கண்ணியமின்றி நடந்துகொண்டதால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர் மன்னிப்புக் கோரியதையடுத்து, அந்த அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் திரும்பப்பெற்றது.
இருப்பினும், அவருக்கு தண்டனையாக அரசு நிலங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 1,000 கனி தரும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றுக்கு நீர் பாய்ச்சி, உரமிட்டுப் பராமரிக்க வேண்டும் என நீதிபதி ஹன்சாட்டே சஞ்சீவ்குமார் உத்தரவிட்டார்.
அத்துடன், பல்லாரி மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்திற்கு 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கட்டணம் செலுத்தியதற்கான சான்றையும், மரங்கள் நட்டதை உறுதி செய்யும் அறிக்கையையும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அவர் தாக்கல் செய்ய வேண்டும். மரக்கன்றுகள் நட்ட விவரம் நவம்பர் 2ஆம் தேதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்.
வழக்கறிஞர் என்பவர் பொதுமக்களுக்காக வாதாடும் பிரதிநிதியே அன்றி, சொந்த விவகாரம் போல் நடந்துகொண்டு நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.


