புதுடெல்லி: இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 9) நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றபின் நடைபெற்ற இரண்டாவது அனைத்துக் கட்சிக் கூட்டம் இது. அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களது ஆதரவை மறுவுறுதிப்படுத்தின.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்தியாவின் தாக்குதல் குறித்து கட்சிகளிடம் திரு ராஜ்நாத் விளக்கினார்.
அத்தாக்குதலில் முக்கியப் பயங்கரவாதிகள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர் நடவடிக்கை என்பதால் அதுகுறித்த விரிவான தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்களைச் சுட்டி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் உள்ள ஒன்பது இடங்களைக் குறிவைத்து புதன்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியது. அவ்விடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வந்ததாக இந்தியா கூறியது.
பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய எதன்மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 57 பேர் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

