புவனேஸ்வர்: இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 2) இரவு 7.20 மணியளவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 233 பேர் மாண்டுபோனதாகவும் 900 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டதில் அதன் சில பெட்டிகள் அருகிலிருந்த தண்டவாளத்தில் விழுந்தன.
அப்போது, எதிர்த்திசையில் பெங்களூரில் இருந்து கோல்கத்தா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில், தடம்புரண்ட ரயில் பெட்டிகள்மீது மோதியது என்று ரயில்வே அமைச்சின் பேச்சாளர் சௌரப் சர்மா சொன்னதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.
"கோல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவுரயில், பாகாநகா பஸார் நிலையத்திற்கு அருகே ஜூன் 2 வெள்ளிக்கிழமை மாலை தடம்புரண்டது. பின்னர் பெங்களூரில் இருந்து கோல்கத்தா நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலும் அதே நிலையத்தில் தடம்புரண்டது," என்று ரயில்வே அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
கோரமண்டல் விரைவு ரயிலின் 15 பெட்டிகளும் இன்னொரு ரயிலின் இரண்டு பெட்டிகளும் தடம்புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்; 60 அவசர மருத்துவ வண்டிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தன.
விபத்தில் மாண்டோரின் குடும்பத்தாருக்கு அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து இன்று ஒருநாள் மாநில அளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
அவ்வழியே செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

