இமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா சாகுபடிக்குச் சட்டபூர்வ அனுமதி

இமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா சாகுபடிக்குச் சட்டபூர்வ அனுமதி

2 mins read
2370edfa-b8aa-49c9-8e4f-075aa10d0d45
கஞ்சா செடி. - படம்: விக்கிப்பீடியா

சண்டிகார்: இமாச்சலப் பிரதேசத்தில் மருத்துவ மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்காகக் கஞ்சா சாகுபடி செய்ய அம்மாநில அரசு சட்டபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுகவிந்தர் சிங் சுகு தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான போதைப்பொருள் விதிமுறைத் திருத்தங்களுக்கு அதிகாரபூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உத்தராகண்ட், மத்தியப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் கஞ்சா சாகுபடியை அனுமதிக்கும் மூன்றாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.

பொழுதுபோக்குத் தேவைகளுக்காகக் கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கும் உரிமமின்றிச் சாகுபடி செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து அமலில் இருக்கும். மருத்துவப் பொருள்கள், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள், துணி ஆலைத் தயாரிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தவறான பயன்பாட்டைத் தடுக்கும் பொருட்டு, போதை தரும் வேதிப்பொருளின் அளவு 0.3 விழுக்காட்டுக்குக் குறைவாக உள்ள சான்றளிக்கப்பட்ட விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். மேலும், திறந்தவெளிகளில் கஞ்சா விதைகளை விதைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

சாகுபடிப் பகுதிகள் அனைத்தும் மூடிய பசுமைக் குடில்களில் அமைக்கப்பட வேண்டும். சாகுபடி நிலங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், புவிசார் அமைவிடக் குறியீட்டு முறைகள் மூலமும் நிலங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சுங்கத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தொடர் சோதனைகளை மேற்கொள்வர்.

வேளாண்மைத் துறை இதற்கான முதன்மை அமைப்பாகச் செயல்படும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இயக்க நடைமுறைகளும் வகுக்கப்படும்.

தகுதிவாய்ந்த விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஓராண்டு காலச் செல்லுபடியாகும் உரிமங்கள் வழங்கப்படும். உற்பத்தியாளர்களுடன் முன்-கொள்முதல் ஒப்பந்தம் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறை மூலம் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் முதல் 2,000 கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குல்லு, மண்டி, சம்பா போன்ற மாவட்டங்களில் இயற்கைச் சூழலில் தானாக வளரும் கஞ்சா தாவரத்தை முறைப்படுத்திப் பயன்படுத்துவதன் மூலம், வனவிலங்குகளால் பாரம்பரியப் பயிர்ச் சேதத்தைச் சந்திக்கும் உள்ளூர் விவசாயிகளுக்குப் புதிய வாழ்வாதாரமும் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்
கஞ்சாஒப்புதல்ஒப்பந்தம்