சண்டிகர்: பூனைக்குட்டி என நினைத்து இரண்டு சிறுத்தைக்குட்டிகளைச் சிறுவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஆரவல்லி மலைப்பகுதியில் தங்களது தாயுடன் அந்தச் சிறுத்தைக்குட்டிகள் சுற்றித் திரிந்தன. எப்படியோ தங்களது தாயைவிட்டுப் பிரிந்த அவை, நூ மாவட்டம், கோட்லா எனும் சிற்றூரை ஒட்டிய மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் தஞ்சம் புகுந்தன.
இந்நிலையில், அந்தக் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், அவற்றைப் பூனைக்குட்டிகள் என நினைத்து, தங்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்று, அவற்றுடன் விளையாடினர்.
தகவலறிந்து விரைந்த ஹரியானா வனத்துறையினர், அந்தச் சிறுத்தைக்குட்டிகளை அவற்றின் தாயுடன் சேர்த்தனர்.
சிறுத்தைக்குட்டிகளைக் காட்டிற்கு எடுத்துச்சென்ற வனத்துறையினர், அவற்றை ஓர் உயர்த்தப்பட்ட மேடையில் வைத்துக் காத்திருந்தனர். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து, குட்டிகளின் ஓலத்தைக் கேட்டு தாய்ச் சிறுத்தை அவ்விடத்திற்கு வந்து, அவற்றைத் தன்னுடன் அழைத்துச் சென்றது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதன் காலடித் தடங்களையும் அவர்கள் காட்டினர்.
இந்நிலையில், வனத்துறையினரின் நடவடிக்கை குறித்து வைஷாலி ராணா என்ற சுற்றுச்சூழல் வல்லுநர் கேள்வியெழுப்பி இருக்கிறார்.
“தாய்ச் சிறுத்தை தனது குட்டிகளைக் கூட்டிச் சென்றது என்று எப்படிச் சொல்கிறீர்கள்? காலடித் தடங்கள் இன்னொரு சிறுத்தையினுடையதாக இருக்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
“சிறுவர்கள் பூனை என நினைத்து தவறுதலாக அக்குட்டிகளை எடுத்துச் சென்றதாகக் கூறுவதையே நம்ப முடியவில்லை. ஆனால், அன்றிரவு முழுவதும் அக்குட்டிகளுடன் கிராமவாசிகள் அனைவரும் படமும் காணொளியும் எடுத்துள்ளனர்.
“ஆரவல்லி மலைப்பகுதியில் சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், இவ்விவகாரத்தில் வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,” என்று கூறினார்.

