மைசூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரு நகரில் அமைந்திருக்கும் ‘இன்ஃபோசிஸ்’ நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) சிறுத்தை ஒன்று காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் அந்தச் சிறுத்தையைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
“இன்ஃபோசிஸ் நிறுவனப் பாதுகாவல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிறுத்தையைப் பார்த்ததாகக் கூறினர். கண்காணிப்பு கேமராப் பதிவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன,” என்று வனத்துறை கூறியது.
தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறையைச் சேர்ந்த 50 ஊழியர்கள் குழு சிறுத்தையைத் தீவிரமாகத் தேடிவருவதாக அது குறிப்பிட்டது. சிறுத்தையைக் கண்டால் மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பதற்காக அந்தக் குழுவில் விலங்குநல மருத்துவரும் இடம்பெற்றுள்ளார்.
வலை, கூண்டு போன்றவற்றுடன் அக்குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறை உதவிப் பாதுகாவலர் ரவீந்திரா கூறினார்.
நிலத்தடி கார் நிறுத்துமிடத்தில் ‘இன்ஃபோசிஸ்’ பாதுகாவல் ஊழியர்கள் சிறுத்தையைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, செவ்வாய்க்கிழமை முதல் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு நிர்வாகம் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

