சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு

சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு

1 mins read
28b1cd29-9d06-49f5-b133-c77d12c72d85
வலையிலிருந்து தப்பிக்க முயன்றதால் சிறுத்தைமீது காவல்துறை அதிகாரிகள் ஒரு கட்டிலைப் போட்டுத் தப்பிக்க விடாமல் பார்த்துக்கொண்டனர். - காணொளிப்படம்: இந்திய ஊடகம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்பால் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

சிறுத்தை நுழைந்ததும் அவ்வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஓர் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

உடனடியாக, உள்ளூர்க் காவல்துறைக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒருவழியாக அவ்வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள், வலைபோட்டு சிறுத்தையைப் பிடித்தனர். வலையிலிருந்து சிறுத்தை தப்பிக்க முயன்றதால் காவல்துறை அதிகாரிகள் அதன்மீது ஒரு கட்டிலைப் போட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் குறைந்தது பத்துப் பேர் கையில் தடியுடன், சிறுத்தையைத் தப்பிக்க விடாமல் கட்டிலைப் பிடித்திருந்ததைக் காணொளி காட்டியதாக ‘என்டிடிவி’ செய்தி குறிப்பிட்டது.

இறுதியில் காவலர்களிடம் சிக்கிய சிறுத்தை, பின்னர் இறந்துபோனது.

சிறுத்தையை மீட்க முயன்றபோது காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்தார்.

அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து அச்சிறுத்தை ஊருக்குள் புகுந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்