இந்தியாவின் ஆக அண்மைய இண்டிகோ விமானச் சேவை நெருக்கடியால் உள்நாட்டுக் கட்டமைப்பில் பேரளவிலான பயணத் தாமதங்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளன.
விமானச் சேவையில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறால் விமான நிலையங்களில் பயணிகளிடையே மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது.
நவம்பரில் தொடங்கிய இந்தப் பிரச்சினை டிசம்பரில் உச்சத்தை எட்டியது. இதுவரையில் செயல்திறனுடன் இயங்கி வந்த இண்டிகோவிற்கு இத்தகைய பெரும்பின்னடைவு ஏற்பட்டதில்லை.
டிசம்பர் 3ல் மட்டும் பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, கோல்கத்தா உள்ளிட்ட பெருநகர விமான நிலையங்களில் 150க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் ரத்து செய்யப்பட்டன.
சேவைத் தடையின் தாக்கம்
இந்த நெருக்கடியால் புதுடெல்லியில் மட்டும் 16,500 உள்நாட்டுப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
டிசம்பர் 4ல் 180 சேவைகள் ரத்து, மறுநாளன்று 400 சேவைகள் ரத்து என்று நிலவரம் தொடர்ந்து மோசமடைந்தது.
ஓடிபி எனப்படும் நேரத்திற்குச் செயல்படும் விகிதம், இரண்டே நாள்களில் 35லிருந்து 8.5க்குக் குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
தடைக்கான காரணம்
விமானிகள் பறக்கும் நேரம் தொடர்பான வரம்பு இந்த நெருக்கடிக்கான முக்கியக் காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.
விமானிகளுக்கான ஓய்வு நேரத்தின் கட்டாய நீட்டிப்பு, அவர்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தியது.
மலிவுக் கட்டண விமானச் சேவையான இண்டிகோ, இந்த விதிமுறை மாற்றத்தால் திக்குமுக்காடியது.
அன்றாடம் கிட்டத்தட்ட 2,300 விமானச் சேவைகளை இயக்குநம் இண்டிகோவுக்குப் போதிய விமானிகள் இல்லை.
மேலும், தொழில்நுட்பக் கோளாறும் குளிர்காலத்தால் ஏற்பட்டுள்ள பயண மாற்றங்களும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
மோசமான வானிலை, குறிப்பாக வடஇந்திய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள அடர்த்தியான பனிமூட்டத்தால் செயல்பாடுகள் மெதுவடைந்துள்ளன.
நிலைமையைக் கையாள முயற்சி
நிலைமை மேலும் மோசமாகிவர உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட குடிமை விமானப் போக்குவரத்து இயக்குநரகம், இண்டிகோவிடம் இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் கேட்டுள்ளது.
டிசம்பர் 4ல் இண்டிகோவின் நிர்வாகத் தலைமைத்துவத்தைச் சந்தித்த குடிமை விமானத்துறைத் தலைவர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, நிலவரம் குறித்து தம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த விதிமுறை நெருக்குதலால் இண்டிகோ நிறுவனம், தனது பங்கிற்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் சேவைகளைக் குறைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்தது. பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் நிலவரம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

