புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, கடிதம் எழுதுவதை தன் முக்கியப் பழக்கமாகக் கொண்டவர். ஏறக்குறைய 4,000 கடிதங்களை அவர் எழுதி உள்ளாராம்.
மவுண்ட் பேட்டன், அவரது மனைவி உட்பட பல தலைவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி தன்னுடன் எடுத்துச் சென்று விட்டதாகவும் இது, காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோல் அவர் எடுத்துச் சென்ற கடிதங்களை எல்லாம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை எட்டு கடிதங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாம்.
ஆனால், இதுவரை சோனியாவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால், இந்த விவகாரம் தொடர்பில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், டெல்லியில் இருந்த நேரு நினைவு நூலகம் பிரதமர்களின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, கலாசார அமைச்சகத்தின் பொறுப்பில் செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால் உட்பட பல பிரதமர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், அவர்களது வரலாறு எனப் பல ஆவணங்களும் இடம்பெற்று உள்ளன.
ஆனால், நேருவின் கடிதங்கள் இல்லாததால், அவற்றையும் இடம்பெறச் செய்து அனைத்தையும் புத்தக வடிவில் கொண்டுவர டெல்லியில் நடைபெற்ற அருங்காட்சியகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.