எல்ஜி, எவரெஸ்ட் பெருங்காயத்துக்குத் தடை

எல்ஜி, எவரெஸ்ட் பெருங்காயத்துக்குத் தடை

2 mins read
dd215bf3-798f-46c0-b08d-08c5ae3ac408
இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் எவரெஸ்ட், எல்ஜி நிறுவனங்களின் பெருங்காயத்தூள் விற்பனைக்குத் தடைவிதித்துள்ளது.  - படம்: நியூஸ18
Google News Preferred Icon

புதுடெல்லி: எவரெஸ்ட், எல்ஜி நிறுவனங்களின் பெருங்காயத்தூள் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடைவிதித்துள்ளது. 

பெருங்காயத்தின் தரம் குறித்த புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இரு தயாரிப்புகளுமே மும்பையைச் சேர்ந்தவை.

மும்பையில் உள்ள எவரெஸ்ட், எல்ஜி பிராண்ட் யூனிட்டின் மத்திய உரிமம் பெற்ற ஆலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

குஜராத்தின் உம்பர்கானில் உள்ள எவரெஸ்டின் மாநில உரிமம் பெற்ற ஆலையிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

ஆய்வில் பெருங்காயத்தின் மாதிரிகள் அனைத்தும் தரம் குறைந்தவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2011ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு, தரநிலைகள் விதிகளின்கீழ் கூட்டுப் பெருங்காயம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு உணவுப் பிரிவாகும். இது பிசின், மாவுச் சத்துக்கள், பிற தானிய மாவுப் பொருள்களுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. 

விதிகளின்படி கூட்டுப் பெருங்காயத்தில், குறைந்தது 5 விழுக்காடு ஆல்கஹாலில் கரையக்கூடிய பெருங்காய பிசின் இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு போதுமான மூலப் பெருங்காயம் இருக்க வேண்டும். ஆனால், பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 0 - 3 விழுக்காடு மட்டுமே ஆல்கஹாலில் கரையக்கூடிய பிசின் இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகக் குறைந்ததாகும். 

பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் தேவையான அளவை விட 30 முதல் 40 விழுக்காடு குறைவான மூலப் பெருங்காயத்தை மட்டும் உற்பத்தியாளர்கள் சேர்த்ததை ஆய்வு முடிவுகள் காட்டியதாக ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. 

மும்பையில் உள்ள எல்ஜி பிராண்ட் யூனிட்டில் ஆறு வகையான மூலப் பெருங்காயத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் மூலப் பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மாவுச்சத்து அளவு ஒரு விழுக்காடாக இருக்க வேண்டும் என்ற நிலையில் பரிசோதிக்கப்பட்ட ஆறு வகைகளிலும் மாவுச்சத்து (ஸ்டார்ச் அளவு) 15 விழுக்காடு முதல் 32 விழுக்காடுவரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

பெருங்காயச் செடியின் வேரிலும் தண்டிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் உலர்ந்து பிசினாகிறது. காரமான, கசப்பான சுவையும், கடுமையான மணமும் கொண்ட பெருங்காயம் இந்தியச் சமையலில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

பாரசீகத்தை, தற்போதைய ஈரானைப் பிறப்பிடமாகக் கொண்டது பெருங்காயம். ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் குளிர் பகுதிகளில் பெருங்காயச் செடி அதிகம் வளர்கிறது. வறண்ட, குளிரான பாலவனம், மலைப் பகுதிகளிலேயே இச்செடி வளரும் என்பதால் பெருங்காய பிசின் அரிதான பொருளாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்