கேரளாவில் சரக்குக் கப்பல் மூழ்கியது: பணியாளர்கள் 24 பேரும் மீட்பு

2 mins read
25c5710b-28e7-452a-9132-9e3bb6bca8ee
லைபீரிய சரக்குக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. - படம்: இந்திய ஊடகம்

கொச்சி: கேரளாவில் லைபீரிய கொடிதாங்கிய சரக்குக் கப்பல் ஒன்று கடலுக்குள் மூழ்கியது.

கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எம்எஸ்சி எல்சா 3 (MSC Elsa 3) என்னும் பெயருடைய அந்தக் கப்பல், சனிக்கிழமை (மே 24) கொச்சியில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் வந்துகொண்டு இருந்தபோது விபத்தில் சிக்கியது.

அந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 1.25 மணிக்கு இந்தியக் கடலோரக் காவற்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் படையின் சாக்‌ஷம் என்னும் உதவிக் கப்பல் விரைந்து சென்றது. லைபீரியக் கப்பலில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற சோதனையில் உதவிக் கப்பல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பின்னர், கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஆர்ன்வெஷ், கப்பற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா ஆகிய இரு கப்பல்களும் விரைந்து சென்று லைபீரியக் கப்பலில் இருந்தவர்களை மீட்கத் தொடங்கின.

கப்பல் மூழ்கத் தொடங்கியபோது அதில் 24 பணியாளர்கள் இருந்தனர். சனிக்கிழமை 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஞாயிறு காலை கப்பல் முழுமையாக கடலுக்குள் மூழ்கும் முன்னர், எஞ்சிய மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

லைபீரியக் கப்பலில் 640 கொள்கலன்கள் இருந்தன. அவற்றில் 13 அபாயகரமான சரக்குகள் கொண்டவை என்றும் 12 கொள்கலன்களில் கால்சியம் கார்பைட் இருந்தது என்றும் கடலோரக் காவற்படை கூறியது. அத்தனை கொள்கலன்களும் கப்பலுடன் மூழ்கிவிட்டன.

184 மீட்டர் நீளமுள்ள அந்தக் கப்பல் கொச்சியின் விழிஞ்சம் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபோது விபத்தில் சிக்கியது.

“சரக்குக் கப்பலில் இருந்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்,” என்று இந்தியத் தற்காப்புத் துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மீட்கப்பட்டவர்கள் ஜார்ஜியா, ரஷ்யா, உக்ரேன், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது.

370 டன் எரிபொருளும் எண்ணெய்யும் அந்தக் கப்பலில் இருந்தபோதிலும் கடலில் எண்ணெய் கசிந்ததாகத் தகவல் இல்லை என்று கடலோரக் காவற்படை கூறியது.

குறிப்புச் சொற்கள்