புதுடெல்லி: கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
டெல்லியில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கலால் கொள்கை தொடர்பான வழக்கை விசாரிக்கும்படி கெஜ்ரிவால் சார்பில் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு எதிராக கலால் கொள்கை வழக்கை மீண்டும் விசாரிக்க அமலாக்கத்துறை துணைநிலை ஆளுநரிடம் டிசம்பர் 5ஆம் தேதி அனுமதி கோரியது.
இந்நிலையில், திரு கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாக்கத்துறைக்குத் துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
அண்மையில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகிய இருவருக்கும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா இருவரும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரு வழக்குகளிலும் இருந்து தற்போது பிணையில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.