ஆயுள் காப்புறுதி, மூத்தோருக்கான மருத்துவக் காப்புறுதிக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க பரிந்துரை

2 mins read
40b41a83-2d74-47e7-9c93-c1a81449ff47
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: ஆயுள் காப்புறுதி, மூத்தோருக்கான மருத்துவக் காப்புறுதி ஆகியவற்றின் தவணைத் தொகைக்கு (பிரிமியம்) பொருள், சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரை தொடா்பாக அடுத்த மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

ஆயுள் காப்புறுதி, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்புறுதி ஆகியவற்றின் தவணைத் தொகைமீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை கடந்த செப்டம்பா் மாதம் ஜிஎஸ்டி மன்றம் அமைத்தது.

பீகாா் துணை முதல்வா் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான இந்தக் குழுவில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, குஜராத், மேகாலயம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அமைச்சா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்புறுதி தவணைத் தொகைமீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்களிக்கவும் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்புறுதிக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கவும் அக்டோபர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஆயுள் காப்புறுதி, மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்புறுதி ஆகியவற்றின் தவணைத் தொகைமீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்களிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்