கோவா: இந்தியாவின் கோவா மாநிலம் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கான கட்டணங்களைக் குறைக்க முனைகிறது.
புற்றுநோய் உட்பட அரிய வகை நோய்கள் சிலவற்றுக்கான சிகிச்சைகளுக்கு அது பொருந்தும். மருந்துப் பொருள்களுக்கும் மருத்துவச் சாதனங்களுக்குமான விலைகளைக் குறைக்க மருந்தாக்க நிறுவனங்களுடன் மாநில அரசாங்கம் பேசி வருகிறது.
புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்க அதிக நிதி தேவைப்படும். அதைச் சமாளிக்க மாநிலத்தின் புதிய முயற்சி நோயாளிகளுக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கோவா மாநிலத்தின் புதிய கொள்கைப்படி, அரசாங்கம் மருந்துப் பொருள்களையும் மருத்துவக் கருவிகளையும் மருந்தாக்க நிறுவனங்களிடமிருந்து கடைகளில் கிடைப்பதைவிடக் குறைந்த விலைக்கு வாங்கும். அதனால் கூடுதல் நோயாளிகள் பலன் பெறுவர் என்று நம்பப்படுகிறது. அவர்கள் சிகிச்சை பெறும் காலம் அதிகரித்து ஆயுட்காலம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அத்தகைய கொள்கையை வகுத்திருக்கும் முதல் மாநிலம் கோவா என்று அந்த மாநிலத்தின் சுகாதார அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறினார்.
நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையுடன் அது தொடங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோய், அரிய வகை மரபணுக் கோளாறு, உடலின் தடுப்புச் சக்திப் பிரச்சினை முதலியவற்றுக்கான அதிநவீனச் சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ($73,150) வரை ஆகக்கூடும். பெரும்பாலான நோயாளிகளுக்கு அந்த அளவுக்கு நிதி திரட்டுவது சிரமமாக இருக்கக்கூடும்.
மருத்துவச் சிகிச்சைகள் அனைவருக்கும் நியாயமான வகையில் கிடைக்கும் வழிகளை மேம்படுத்தப் புதிய அணுகுமுறை உதவும் என்றார் அமைச்சர் ரானே. அதன் மூலம் அதிகமான நோயாளிகளுக்கு உதவமுடியும் என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கோவாவில் ஆண்டுதோறும் புதிதாகக் கிட்டத்தட்ட 1,500 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அந்த எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. புதிதாக நோய் கண்டவர்களில் சுமார் 300 பேர் மார்பகப் புற்றுநோயால் அவதியுறுகின்றனர்.
நிலைமையைச் சமாளிக்க மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது முக்கியம் என்று திரு ரானே சொன்னார்.