புதுடெல்லி: இந்தியாவில் மின்னல் தாக்கி உயிரிழப்பது வெகுவாக அதிகரித்து வருவதாக அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்காலத்தில் மட்டும் 1,900க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி மாண்டுபோயினர்.
கடந்த 1967ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை, அங்கு மின்னல் தாக்கி 101,309 பேர் இறந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிலும் குறிப்பாக, 2010 - 2020 காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை வெகுவாகக் கூடிவிட்டது என்று ஒடிசா மாநிலத்தின் ஃபக்கிர் மோகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“இந்தியாவில் மின்னல் தாக்குவது சீராக அதிகரித்து வருவதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக அதுவும் விளங்குகிறது,” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1967-2002 காலகட்டத்தில், ஒவ்வோர் இந்திய மாநிலத்திலும் மின்னல் தாக்கி ஆண்டிற்குச் சராசரியாக 38 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அந்தச் சராசரி, 2003-2020 காலகட்டத்தில் ஆண்டிற்கு 61ஆக உயர்ந்தது. மக்கள்தொகை அதிகரிப்பும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் இடி மின்னல் தாக்குவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.