மின்னல் தாக்கியதால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்

மின்னல் தாக்கியதால் இண்டிகோ விமானம் அவசரத் தரையிறக்கம்

கோப்புப் படம்: மணி கன்ட்ரோல்

08 Oct 2026 - 5:49 pm

2 mins read

லக்னோ: பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு 104 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் 17,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை (அக்டோபர் 7) பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், மாலை 4.20 மணிக்கு லக்னோவில் தரையிறங்க இருந்தது. அப்போது வானிலை மோசமாக இருந்த நிலையில், விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது.

இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி, பதற்றமடையாமல் வேகமாகச் செயல்பட்டு விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, மாலை 4.05 மணியளவில் அவர் லக்னோ விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த 104 பயணிகளும் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர்.

மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட பழுது காரணமாக அந்த விமானம் லக்னோவிலேயே நிறுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

முதல்வரால் தாமதம்

இதனிடையே, பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குச் செல்லவிருந்த இண்டிகோ-6E 870 விமானம், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் வருகைக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடுபாதையில் காத்திருக்க வைக்கப்பட்டதாகப் பயணி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்ட சுபர்ணா சிங் என்ற பயணி, “எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினோம்,” என்று தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.

எனினும், இந்தப் புகாரை ஏற்க மறுத்துள்ள இண்டிகோ விமான நிறுவனம், விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குச் செயல்பாட்டுப் பிரச்சினைகளே முக்கியக் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்