மும்பை: மும்பை - புனே விரைவுச்சாலையில் போர் மலைப்பாதைப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் தவிர்க்கும் வகையில் அங்குப் புதிய இணைப்புச் சாலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த இணைப்புச் சாலை ‘மிஸ்சிங் லிங்க்’ என்று அழைக்கப்படுகிறது.
சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மகாராஷ்டிர மாநிலத் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இணைப்புச் சாலை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
“கொப்போலி முதல் லோனாவாலா அருகேயுள்ள குஸ்காவ் வரை 13.3 கி.மீ. தொலைவிற்கு இந்த ‘மிஸ்சிங் லிங்க்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆபத்தான மலைப்பாதையைத் தவிர்க்க முடியும்,” என்று அவர் கூறினார்.
“ஏறக்குறைய 6,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகாராஷ்டிர மாநிலச் சாலை மேம்பாட்டுக் கழகம் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறது. இதில் இரண்டு சுரங்கப்பாதைகளும் பிரம்மாண்டமான பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய சாலையின் மூலம் மும்பை - புனே இடையிலான பயண நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மிச்சமாகும்,” என்றார் அவர்.
மேலும், “தொடக்கத்தில் இந்தச் சாலையில் இலகுரக வாகனங்களும் பேருந்துகளும் மட்டுமே அனுமதிக்கப்படும். கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பாதையை பயன்படுத்துவதற்காகக் கூடுதல் சுங்கக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது,” என்று துணை முதல்வர் ஷிண்டே தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 650 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் தூண்கள் 182 மீட்டர் உயரம் கொண்டவை. இது பாந்திரா - ஒர்லி கடல் பாலத்தைவிட உயரமானது. மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள 23.75 மீட்டர் அகலம் கொண்ட சுரங்கப்பாதை உலகிலேயே ஆக அகலமான சாலைச் சுரங்கப்பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது,” என்று குறிப்பிட்ட அவர், இந்தச் சாலை கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற வாய்ப்புள்ளது என்றார்.
கடுமையான மழை, பலத்த காற்று, அடர்ந்த மூடுபனி போன்ற சவாலான இயற்கைச் சூழல்களுக்கு இடையே இந்தப் பொறியியல் அதிசயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு ஷிண்டே, இதன் மூலம் லோகார் கோட்டை, விசாபூர் கோட்டை, கர்லா குகைகள் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் இனி எளிதாகச் செல்ல முடியும் என்று கூறினார்.

