ஸ்ரீநகர்: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த ஆசிரியர்கள் இருவரைப் பணி நீக்கம் செய்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அவ்விரு ஆசிரியர்களும் ‘லஷ்கர்-இ-தொய்பா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு தொடர்ந்து பல்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகள், தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, காஷ்மீரின் ரியாசி பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர திட்டமிட்டுச் செயல்படுவதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. மேலும், பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருப்பதும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ரியாசி மாவட்டத்தின் மஹோர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய குலாப் ஹுசைன் என்பவரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார்.
அவரும் மற்றொரு ஆசிரியரான மஜித் இக்பால் தார் என்பவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதச் செயலுக்கான நிதியைச் சேகரித்தல், ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல், நாச வேலைகளை அரங்கேற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், அரசுப் பணியில் இருந்தும் இருவரும் நீக்கப்பட்டனர்.

