குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த ஆதித்ய சிகார்வர் என்பவர், சமூக ஊடகப் பக்கத்தில் அதிக விருப்பங்களைப் (Likes) பெறுவதற்காகப் புதுமையான காணொளி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டார்.
அதற்காகத் தனது காதலியை வரவழைத்து, அவரது வெள்ளை நிற கார் முழுவதும் 3,400 ‘லிப்ஸ்டிக்’ முத்த முத்திரைகளைப் பதித்து காணொளியைப் பதிவிட்டார்.
ஒரே நாளில் அந்தக் காணொளி 55 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்பட்டு சமூக ஊடகங்களில் பரவியது.
இதனையடுத்து, ‘லிப்ஸ்டிக்’ முத்தங்களால் குளித்திருந்த காரை குவாலியர் நகரின் முக்கியச் சாலைகளில் ஆதித்ய சிகார்வர் ஓட்டித் திரிந்தார்.
இது போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, தாத்திபூர் பகுதியில் சென்ற காரைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்டதற்காக அவருக்கு ரூ.5,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், காவல்துறையினரின் கண்டிப்பை அடுத்து காரில் இருந்த ‘லிப்ஸ்டிக்’ முத்தங்களைத் தண்ணீரை ஊற்றி அவரே கழுவி அகற்றினார்.
காதலி, காதலரின் வயது விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.


