சிம்லா: இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அரசாங்கப் பேருந்துகளில் மதுபான, ‘குட்கா’ புகையிலை விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும் போக்குவரத்து அமைச்சருமான முக்கேஷ் அக்னிஹோத்ரி செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 26) அதனை அறிவித்தார். இமாச்சல சாலைப் போக்குவரத்து அமைப்பின் இயக்குநர்கள் அண்மையில் நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என்டிடிவி போன்ற ஊடங்கள் தெரிவித்தன.
இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு அக்னிஹோத்ரி, இமாச்சல சாலைப் போக்குவரத்து அமைப்பு கிட்டத்தட்ட 1,000 பழைய பேருந்துகளை மீட்டுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.