பிஜ்னோர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று, அங்கிருந்த மக்களிடம் மனிதநேயம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மதுபானங்களைக் கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதில் காயமுற்றவரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக சாலையில் விழுந்த மது போத்தல்களை அங்கிருந்தவர்கள் திருடிச் சென்ற அவலநிலை ஏற்பட்டது.
வெளிநாட்டு, உள்நாட்டு மது போத்தல்களை ஏந்திச் சென்ற அந்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றொரு வாகனத்தை உரசிவிட்டு அங்கிருந்த மரத்தின் மீது மோதியது. அதையடுத்து சாலையில் விழுந்த போத்தல்களை மக்கள் திருடிச் செல்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
சனிக்கிழமை (மே 25) அதிகாலை 4 மணிக்கு நஜிபபாத் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நெடுஞ்சாலையில் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது மாடு ஒன்று திடீரென சாலையைக் கடந்ததால் அதன் மீது மோதுவதைத் தவிர்க்க வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.
இந்த விபத்தில், வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த மது போத்தல்களில் பலவும் முற்றிலுமாக சேதமுற்றன. எனினும், சில போத்தல்கள் உடையாமல் இருந்த நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்த மக்கள், அவற்றைத் திருடத் தொடங்கினர். விபத்தில் காயமுற்ற ஒருவரை அவர்களில் எவரும் கவனிக்கவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சாலையில் விழுந்த மது போத்தல்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

