தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் அம்பானி

2 mins read
7e1182de-e37b-43ed-84cb-fa83d30d8020
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி. - படம்: ஊடகம்

டெல்லி: இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 350ஐக் கடந்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 50ஆக இருந்தது.

இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்களின் பட்டியலை ‘ஹுருன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில் இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தார் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு தொழிலதிபர் அதானி முதலிடத்தில் இருந்தார். இம்முறை அவர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.8.15 லட்சம் கோடியாகும்.

மூன்றாம் இடத்தில் உள்ள ரோஷினி நாடார் மல்ஹோத்ராவின் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

‘ஹுருன்’ நிறுவனம் முதற்கட்டமாக நூறு பேர் கொண்ட பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள முகேஷ் அம்பானியும் கவுதம் அதானியும் எளிதில் எட்டிப்பிடிக்க இயலாத உயரத்தில் இருக்கின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கொண்டிருந்தார் முகேஷ் அம்பானி. அதன் பிறகு 2022ஆம் ஆண்டு இப்பெருமையைத் தட்டிச்சென்றார் அதானி. எனினும் 2023ஆம் ஆண்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் முகேஷ் அம்பானி.

குறிப்புச் சொற்கள்