தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா தாக்கி அழித்ததாகக் கூறும் ‘பயங்கரவாத முகாம்’களின் பட்டியல்

2 mins read
925091d5-98fa-413b-a371-fddadf80d613
இந்தியத் தாக்குதலால் அழிக்கப்பட்ட முஸாஃபராபாத் பள்ளிவாசல். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இரு வாரங்களுக்குமுன் இந்தியாவின் காஷ்மீரில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்குப் பதிலடியாக, இந்தியா புதன்கிழமை (மே 7) அதிகாலை அதிரடித் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் செயல்பட்ட ஒன்பது ‘பயங்கரவாத முகாம்கள்’மீது தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்தது.

ஆனால், இந்தியத் தாக்குதலில் ஆறு இடங்கள் பாதிக்கப்பட்டன என்றும் அவற்றில் எதுவும் பயங்கரவாத முகாம் செயல்படவில்லை என்றும் பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

இந்தியா ‘அழித்ததாக’ கூறப்படும் ஒன்பது இடங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

மர்காஸ் தைபா முகாம்

எல்லையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த இந்த முகாம்தான் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகம் என்றும் அதற்கும் கடந்த மாதம் காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தொடர்புள்ளது என்றும் இந்தியா கூறுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு, 160 உயிர்களைப் பலிகொண்ட மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அஜ்மல் கசாப் பயிற்சி பெற்றதும் இங்குதான் என இந்தியா சொல்கிறது.

மர்காஸ் சுபான் முகாம்

எல்லையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த இந்த முகாம், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமாகக் கூறப்பட்டது. ஆட்சேர்ப்பு, பயிற்சி, போதனை போன்றவற்றுக்காக அது பயன்படுத்தப்பட்டது என்கிறது இந்தியா.

மெஹ்மூனா ஜோயா முகாம்

கடந்த 2016 இந்திய விமானப்படைத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தி எழுவரைக் கொன்றது உட்பட பல தாக்குதல்கள் இங்குதான் திட்டமிடப்பட்டு, செயல்வடிவம் பெற்றதாக இந்தியா தெரிவித்துள்ளது. எல்லையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்முகாம் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் பயிற்சித் தளமாக இருந்தது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

குல்பூர் முகாம்

கடந்த 2024 ஜூன் மாதம் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், புனிதப் பயணிகளைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதனை மேற்கொண்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றது இந்த முகாமில்தான் என இந்தியா கூறுகிறது. அத்துடன், 2008 மும்பைத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஸாக்கி உர் ரெஹ்மான் லக்வி இம்முகாமிற்கு அடிக்கடி வந்து சென்றதாகவும் சொல்லப்பட்டது. இது எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

சர்ஜல் முகாம்

பாகிஸ்தானுக்குள் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த இந்த முகாமில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளே, மார்ச் மாதம் ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் நால்வரைச் சுட்டுக்கொன்றதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அப்பாஸ் முகாம்

எல்லையிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இம்முகாம், லஷ்கர் இயக்கத்தின் தற்கொலைப் படையினர் பயிற்சி பெறும் இடமாகத் திகழ்ந்தது என்பது இந்தியாவின் வாதம்.

சையத்னா பெலால் முகாம்

ஜெய்ஷ் இயக்கத்தின் அரங்கேற்றத் தளமாக விளங்கிய இம்முகாமிலிருந்துதான் பயங்கரவாதிகள் ஆயுத, வெடிபொருள் பயிற்சி பெறும் இடமாக விளங்கியது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

சவாய் நலா முகாம்

எல்லையிலிருந்து 30 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்திருந்த இம்முகாம், லஷ்கர் இயக்கத்தின் முக்கியப் பயிற்சியிடமாகச் செயல்பட்டதாக இந்தியா கூறுகிறது.

பர்னாலா முகாம்

பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைக் கையாள்வது, நவீன வெடிகுண்டு தயாரிப்பது, காட்டுக்குள் உயிர்பிழைத்திருப்பதற்கான வழிமுறைகள் போன்ற பயிற்சிகளை வழங்க இம்முகாம் பயன்படுத்தப்பட்டதாக இந்தியா குற்றஞ்சுமத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்