அசாம், கேரளா, புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அசாம், கேரளா, புதுவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

2 mins read
84f95181-7120-467b-88e9-4966ec5c9cf1
வாக்குச்சாவடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து தமது வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் ரங்கசாமி. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: அசாம், கேரளா, புதுவையில் ஏப்ரல் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 வரை நடைபெற்றது.

புதுவையில் காலை 11 மணி நிலவரப்படி, 37% வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதேபோல் கேரளத்தில், காலை 11 மணி நிலவரப்படி 33%, அசாமில் 38% வாக்குகள் பதிவாயின.

புதுவை நிலவரம்

புதுவையில் இம்முறை என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருதரப்பிலும் புதுவைக்கு மாநிலத் தகுதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி புதுவை தேர்தல் குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், புதுவை வாக்காளர்கள் பெருந்திரளாக வந்து தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், இளையர்களும் பெண்களும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் புதுவையின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு முதல்வர் ரங்கசாமி, இருசக்கர வாகனத்தில் வந்து தமது வாக்கைப் பதிவு செய்தார்.

இதனிடையே, பாகூர் பகுதியில் ஒருதரப்பினர் வாக்காளர்களுக்கு பரிசுக் கூப்பன் விநியோகிப்பதாகத் தகவல் வெளியானதை அடுத்து, மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

புதுவையில் மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாம் நிலவரம்

அசாம் மாநிலத்தில் மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அங்கு தற்போது பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் வலுவாகக் களமிறங்கி இருப்பதால் பலத்த போட்டி நிலவுகிறது.

மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கேரள நிலவரம்

140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2.71 கோடியாகும்.

பெரும்பாலான மாவட்டங்களில் 33 டிகிரி செல்சியஸ் வெயிலைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பல இடங்களில் வாக்காளர்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மொத்தம் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்