புதுடெல்லி: நார்வே, சீன நிறுவனங்களுடன் இணைந்து ‘கேஷ்பீன்’ என்ற கடன் செயலியை நடத்தி வந்த வங்கி சாரா நிதி நிறுவனமான பி.சி. பைனான்ஸ் சர்வீசஸ் மீது மோசடி புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் சீன உரிமையாளர்கள் வசம் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், மென்பொருள் உரிமங்கள், சேவைகளின் இறக்குமதி ஆகியவற்றின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பி.சி. பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வாயிலாக 430 கோடி ரூபாய் அனுப்பப்பட்டதும் தெரிய வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட நிறுவனம் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதில்களைக் கவனமாக ஆய்வு செய்ததில், நிதி நிறுவனம் விதிமுறைகளை மீறியிருந்தது தெளிவாக நிரூபணமாகி உள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ‘பெமா’ எனப்படும் அன்னியச் செலாவணி மேலாண்மை சட்ட விதி முறைகளை மீறியதாக, அந்நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை 2,146 கோடி ரூபாயை அபராதமாக விதித்தது மட்டுமல்லாமல், 252.36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளையும் முடக்கியது.
கடன் செயலி தொடர்பாக, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்றுக்கு இவ்வளவு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.