பாதியில் நிற்கும் குடியிருப்புத் திட்டங்களுக்கு கடன் உதவி: இந்திய அரசு முடிவு

2 mins read
bda65604-33e4-42e0-a9a6-8a4aad351e65
 ‘சுவாமி-2’ திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. - படம்: சிடிசன் மேட்டர்ஸ்

புதுடெல்லி: நாடு முழுவதும் நிதிப் பற்றாக்குறை உள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க மத்திய அரசு அறிவித்த ‘சுவாமி-1’ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து ‘சுவாமி-2’ திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதற்காக 15,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படுகிறது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பிராப் ஈக்விட்டி ராயல் என்ற நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் நாடு முழுவதும் ஏறக்குறைய ஐந்து லட்சம் வீடுகளின் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை முடிக்க ரூ.55,000 கோடி நிதி தேவை எனவும் மதிப்பிட்டது.

நகர்ப்பகுதிகளில் வசிக்கும் பலர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களை நாடுகிறார்கள்.

இதற்காக வங்கியில் கடன் பெற்று, முன்பணமும் செலுத்துகிறார்கள். எனினும், இவ்வாறு பணம் செலுத்திய பின்னர் அடுக்குமாடிக் கட்டுமானத் திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து இயங்கவில்லை.

இதனால் பணத்தை முதலீடு செய்தவர்களுக்குக் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் ‘பிராப் ஈக்விட்டி’ ஆய்வு நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 1,500 அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களின் கட்டுமானப்பணிகள் தடைபட்டுள்ளதாய் குறிப்பிட்டது.

பெரும்பாலும் நடுத்தர மக்களே இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் வங்கிக் கடனுக்கான மாத தவணை, தற்போது குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை என இரட்டை நெருக்கடிகளுக்கு பலர் ஆளாகின்றனர்.

ஏராளமானோரின் நெருக்கடியின் காரணமாக ‘சுவாமி-1’ என்ற சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது மலிவு, நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடுகளைக் கொண்ட சிறப்புத் திட்டமாகும்.

இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்படும். அதன் பிறகு கட்டுமானப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும். இந்தப் பணி ‘எஸ்பிஐ வென்சர்ஸ்’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் ஏறக்குறைய 50,000 வீடுகளின் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்து மூன்று ஆண்டுகளில் மேலும் முப்பதாயிரம் வீடுகளை ஒப்படைக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘சுவாமி-2’ திட்டத்துக்காக ரூ.15,000 கோடி நிதிதிரட்ட உள்ளது இந்திய அரசு. வங்கிகள், தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்போடு இந்த நிதி திரட்டப்படும் என்றும் இத்திட்டத்துக்காக ஏற்கெனவே 2025-26 பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி மூலதனமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்