பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் மாற்றிவிடப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்படி இதுகுறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீது வழக்கு தொடர ஆளுநர் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான தீர்ப்பை வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம், சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை என்று குறிப்பிட்டது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைக் காட்டிலும், அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகம். அதனால் முதல்வர் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தா அதிகாரிகளும் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 6ஆம் தேதி சித்தராமையா விசாரணைக்காக மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் முன்னிலையானார்.
இதனிடையே லோக் ஆயுக்தாஅதிகாரிகள், கடந்த வாரம் சித்தராமையாவின் மனைவி பார்வதி, உறவினர்கள் மல்லிகார்ஜுன சுவாமி, தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மைசூரு நகர மேம்பாட்டுக் கழக அலுவலகத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
புதன்கிழமை காலை 10 மணிக்கு சித்தராமையா மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் முன்னிலையானார். அவரிடம் 7 பேர் கொண்ட அதிகாரிகள், நில முறைகேடு வழக்கு குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பினர். இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த முதல்வர் சித்தராமையா, அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். என்மீது போடப்பட்டுள்ள இந்தப் பொய்யான வழக்கிலிருந்து நான் விரைவில் விடுதலையாவேன். நான் அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய முறையில் பதில் அளித்துவிட்டதால், மீண்டும் விசாரணைக்கு வரும்படி சொல்லவில்லை,’‘ என்றார் சித்தராமையா.
தொடர்புடைய செய்திகள்
பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டம்
நில முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள சித்தராமையா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினர், சித்தராமையாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு ராமசாமி சதுக்கத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறை கைது செய்து, மாலையில் விடுவித்தது.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் சினேகமயி என்பவர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்குத் தெடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் 26ஆம் தேதிக்குள் இதற்குப் பதிலளிக்குமாறு சித்தராமையாவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.