மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதன்மைக் கடமை: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியைப் பராமரிப்பது கணவனின் முதன்மைக் கடமை: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
22a00eed-1297-431a-82f3-6b247378090f
ஒருவர் தனது மனைவியைப் பராமரிப்பது மாயைபோல இருக்கக்கூடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: பராமரிப்புத் தொகை வழங்குதல் என்பது ஒரு மாயையாக இருக்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தனது மனைவியைப் பராமரிப்பது கணவரின் முதன்மையான, தொடர்ச்சியான கடமையாகும் என்றும் மனைவி அவருடன் வாழ்வதற்கு ஏதுவாக அக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

வழக்கின் பின்னணி

டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் ஆனது. சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவிக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தல் நடந்ததால் அந்தப் பெண் திருமணமான ஓராண்டுக்குள்ளாகவே தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

அதையடுத்து, கணவரைப் பிரிந்து வாழும் அந்தப் பெண், தனது செலவுக்காகக் கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.50,000 பெற்றுத்தருமாறு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த பிறகு, அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.8,000 பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், அந்தத் தொகையை அதிகரித்துத் தரக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் மாதா மாதம் ரூ.15,000 பராமரிப்புத் தொகை வழங்கும்படி உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பெண்ணுக்கான பராமரிப்புத் தொகையை ரூ.25,000ஆக உயர்த்தி உத்தரவிட்டனர்.

மேலும், “ஒருவர் தனது மனைவியைப் பராமரிப்பது மாயைபோல இருக்கக்கூடாது. மனைவி கண்ணியத்துடன் வாழும் வகையிலும், திருமண உறவு இணக்கமாக இருந்த காலத்தில் அனுபவித்தது போன்ற தரத்திலும் அதைச் செய்ய வேண்டும்,” என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினரின் தகுதிக்கு ஏற்ப, மனைவி நியாயமாகவும், கண்ணியத்துடனும் தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், அதேநேரம் அதிகப்படியான சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதும் அவசியமாகும் என்றும் தெளிவுபடுத்தினர்.

குறிப்புச் சொற்கள்