கோட்டயம்: இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு லாரி ஒன்று பரபரப்பான நெடுஞ்சாலையில் பத்து நாள்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
பழுதுபார்க்க முடியாது என்று லாரியின் உரிமையாளர் கைவிரித்துவிட்டார். இதனால், உணவிற்குக்கூட கையில் காசில்லாத அந்த லாரியின் ஓட்டுநர், லாரியிலிருந்த டீசலை விற்று, அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டார்.
கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டம், எட்டுமனூர் நகரிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில்தான் அந்த லாரி நிறுத்தப்பட்டுள்ளது.
கோட்டயத்தில் சரக்கு இறக்கிய பிறகு, கோயம்புத்தூரை நோக்கிச் சென்றபோது அந்த லாரி பழுதாகி நின்றுவிட்டது.
இதுபற்றி அதன் ஓட்டுநரான ராகுல் சர்மா, தன் முதலாளிக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், ஒரு நாளைக்கு ரூ.4,000 இழப்பு ஏற்படுவதாகக் கூறி, லாரியைப் பழுதுபார்க்க தன்னால் உதவ முடியாது எனக் கைவிரித்துவிட்டார்.
அத்துடன், லாரியை விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் ராகுலை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வாகன நிறுவனத் தொழில்நுட்பர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று, லாரியைப் பழுதுபார்க்கும் முயற்சியில் இறங்கினர். ஆயினும், பயன் கிட்டவில்லை.
உதிரி பாகங்கள் வாங்க பணமில்லாத ஓட்டுநர் ராகுலுக்கு, அக்கம்பக்கத்தினர் உணவு வாங்கிக் கொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கோவில் குளத்தில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற ராகுல், பின்னர் திரும்பவேயில்லை.
சாலை நடுவே நிற்கும் லாரியில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.