இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களின் இழப்பு ரூ.38,000 கோடியாக உயரக்கூடும்

இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களின் இழப்பு ரூ.38,000 கோடியாக உயரக்கூடும்

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

27 Jun 2026 - 3:25 pm

2 mins read

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான நிகர இழப்பு ரூ.36,000 கோடி முதல் ரூ.38,000 கோடி என்ற அளவிற்கு உயரக்கூடும் என்று ‘இக்ரா’ (ICRA) தரவரிசை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, விமான எரிபொருள் விலையேற்றம், புதிய விமானங்கள் வரவால் அதிகரிக்கும் குத்தகைச் செலவுகள் போன்றவையே அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் விமான நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்து, விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

அத்துடன், பணவீக்கத்தால் மக்களும் தேவையற்ற பயணங்களைக் குறைத்து வருகின்றனர்.

இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டிற்கான உள்நாட்டு மற்றும் அனைத்துலகப் பயணிகள் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி குறித்த தனது முன்னுரைப்பை இக்ரா குறைத்துள்ளது.

கடந்த 2026ஆம் நிதியாண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை ரூ.32,000 கோடி முதல் ரூ.34,000 கோடி வரையிலான நிகர இழப்பைச் சந்தித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இக்ராவின் முந்தைய மதிப்பீடான ரூ.18,000 கோடியைவிட மிக அதிகமாகும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விமான எரிபொருள் விலை கிட்டத்தட்ட 27 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள செலவின அதிகரிப்பை விமானக் கட்டண உயர்வுமூலம் மட்டுமே ஈடுகட்ட முடியாது என்பதால் இழப்பு அதிகரிக்கும் என இக்ரா விளக்கியுள்ளது.

இதன் காரணமாக, உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி முன்னுரைப்பை 6 - 8 விழுக்காட்டிலிருந்து 3 - 6 விழுக்காடாக இக்ரா குறைத்துள்ளது. அனைத்துலகப் பயணிகள் போக்குவரத்து கடந்த ஏப்ரலில் 39 விழுக்காடு சரிவடைந்ததைத் தொடர்ந்து, அதன் வளர்ச்சி முன்னுரைப்பும் 8 - 10 விழுக்காட்டிலிருந்து 0 - 3 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 11.3 விழுக்காடு அதிகரித்து, 15.6 மில்லியனாக உயர்ந்தது.

மேலும், விமானங்களில் இருக்கை நிரம்பும் விகிதமும் முந்திய ஆண்டின் 83.9 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் 88.8 விழுக்காடாக அதிகரித்தது என்றும் இக்ரா குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாவிமானப் போக்குவரத்துஇழப்புஎரிபொருள்விலையேற்றம்