தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

250 கிலோமீட்டர் பயணம்: உரிமையாளருடன் இணைந்த ‘மகராஜ்’

1 mins read
4352c9cb-0eef-4f02-b8a7-e217c7afada1
புனித யாத்திரத் தலத்தில் கூட்டத்தின் மத்தியில் காணாமல் போன நாய், அதன் உரிமையாளரைத் தேடி 250 கிலோமீட்டர் பயணம் செய்தது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: தன் உரிமையாளரைத் தேடி 250 கிலோமீட்டர் பயணம் செய்த ‘மகராஜ்’ என்ற நாய், மீண்டும் திரும்பி வந்ததை ஒரு கிராமமே விருந்து வைத்துக் கொண்டாடி உள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தின் யமகர்னி கிராம மக்கள் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டு வியந்தனர்.

வயது முதிர்ந்த அந்த நாய், ஜூன் இறுதி வாரத்தில் தென் மகாராஷ்டிராவின் பந்தர்பூர் புனித யாத்திரைத் தலத்திற்கு அதன் உரிமையாளருடன் சென்றிருந்தபோது காணாமல் போனது.

நாயின் உரிமையாளர் அவரின் நண்பர்களோடு பஜனைகள் பாடிச் சென்றபோது அவருடனே சென்ற நாய், திடீரென்று காணாமல் போய்விட்டது.

வேறொரு கூட்டத்தோடு நாய் சென்றுவிட்டதாக அவ்விடத்தில் இருந்தோர் அந்த நாயின் உரிமையாளரிடம் கூறினர்.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் நாயின் உரிமையாளர் ஜூலை 14ஆம் தேதி தமது ஊருக்குத் திரும்பிவிட்டார்.

ஆனால், மறுநாளே அவரது வீட்டின் முன்னால் மகராஜ் நின்றுகொண்டிருந்ததாகவும் எதுவுமே நடக்காதது போல் அது நடந்துகொண்டதாகவும் உரிமையாளர் கூறினார்.

மகிழ்ச்சி வெள்ளத்தில் நாயின் உரிமையாளரும் கிராமவாசிகளும் சேர்ந்து மகராஜ் திரும்பி வந்ததைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

மாலையும் கழுத்துமாக அந்த நாயை ஊர்வலமாகக் கொண்டு சென்றதுடன் அதன் பெயரில் விருந்தும் படைத்தனர்.

காணாமல் போன நாய் திரும்பி வந்ததை, பேரதிசயமாக அந்தக் கிராம மக்கள் கருதினர்.

குறிப்புச் சொற்கள்