சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டேராபஸ்ஸி அருகேயுள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பல்ஜிந்தர் சிங், குடும்பத்திற்குத் தெரியாமல் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி விழுந்துள்ளது.
சிறு விவசாயியும் சரக்குந்து ஓட்டுநருமான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பண்டிகைக் காலங்களில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாக லாட்டரிச் சீட்டு வாங்கிவந்தார்.
15 ஆண்டுகளாகப் பலமுறை முயன்றும் பெரிய பரிசு ஏதும் கிடைக்காத நிலையில், இம்முறை தீபாவளியை முன்னிட்டுப் பஞ்சாப் அரசு வெளியிட்ட ‘டியர் தீபாவளி பம்பர் 2026’ சீட்டை ரூ.500க்கு வாங்கினார். 12 ராசிகளின் பெயர்களில் மொத்தம் 36 லட்சம் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
நவம்பர் 16ஆம் தேதி இரவு வெளியான குலுக்கல் முடிவுகளில் இவரது சீட்டிற்கு ரூ.12 கோடி முதல் பரிசு விழுந்தது. இரவு 11 மணியளவில் இத்தகவலை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நண்பர்களுடன் ஜிரக்பூரில் உள்ள லாட்டரி அலுவலகத்திற்குச் சென்று பரிசுத்தொகை பெறுவதற்கான நடைமுறைகளை முடித்தார்.
இது குறித்து திரு பல்ஜிந்தர் சிங் கூறுகையில், “2010ஆம் ஆண்டு முதல் ரகசியமாக லாட்டரி வாங்கி வருகிறேன். இறைவன் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்துவிட்டார். இப்பரிசுத்தொகையில் கணிசமான பகுதியை எனது இரண்டு பிள்ளைகளின் உயர்கல்விக்காகச் செலவிடத் திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.
