முதுமையில் மலர்ந்த காதல்; மூத்தோர் இல்லத்தில் திருமணம்

2 mins read
8789fcfc-983a-44e6-aa75-5717fbdd7be7
மூத்தோருக்கு நிச்சயம் துணை வேண்டும் என்பதை உணர்ந்ததால் திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறிய புதுமணத் தம்பதியினர். - படம்: ஊடகம்

அமராவதி: ஆந்திராவில் இருக்கும் மூத்தோர் இல்லம் ஒன்றில் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 18ஆம் தேதி) திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் தம்பதியினராக இணைந்த மணமகனுக்கு 64 வயது; மணமகளுக்கு 68 வயது.

ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா மூத்தோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இங்கு தங்கி உள்ளனர்.

இந்த இல்லத்தில் நாராயணபுரி பகுதியைச் சேர்ந்த 64 வயது மூர்த்தி என்பவர் ஈராண்டாக இருக்கிறார். இவருக்குக் கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதே மூத்தோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியைச் சேர்ந்த 68 வயது ராமலட்சுமி, மூர்த்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவந்துள்ளார். ராமலட்சுமியின் கவனிப்பால் மூர்த்தியின் உடல்நிலை சற்று தேறிவந்தது.

வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்ததால், திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு செய்தனர். இதுகுறித்து மூத்தோர் இல்லத்தின் நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இருவருக்கும் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்பதால், மூத்தோர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்த முடிவுசெய்தனர். அதன்படி, இருவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது.

“மூத்தோருக்கு நிச்சயம் துணை இருக்க வேண்டும். இதை நாங்கள் உணர்ந்தோம். முதிர்வயதை ஒரு தடையாக நாங்கள் நினைக்கவில்லை. மனம் ஒத்துப் போனது, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இறுதி நாள்கள் வரை பிரியாமல் வாழ்வோம்,” என அந்தப் புதுமணத் தம்பதி கூறினர்.

குறிப்புச் சொற்கள்