மலிவுக் கட்டண விமானச் சேவை; புதிய பிரிவை அறிமுகம் செய்த ஏர் இந்தியா

மலிவுக் கட்டண விமானச் சேவை; புதிய பிரிவை அறிமுகம் செய்த ஏர் இந்தியா

2 mins read
f8541620-f5c2-4541-82ee-23de2bc6e70b
‘ஃபேர் கிளாஸ்’ என்னும் பிரிவை அறிமுகம் செய்த ஏர் இந்தியா. - படம்: ஏர் இந்தியா

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம் மலிவுக் கட்டணப் பயணச் சேவையில் போட்டி கொடுக்கும் விதமாகச் சில அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில உள்நாட்டு ஏர் இந்தியா விமானங்களில் ‘ஃபேர் கிளாஸ்’ என்னும் புதிய கட்டணப் பிரிவு அறிமுகம் செய்யப்படுகிறது.

அதில் பயணிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச உணவுகள் வழங்கப்படாது. அவர்கள் தங்களுடன் 7 கிலோகிராம் எடை வரையிலான பயணப் பைகளை எடுத்துச் செல்லலாம். அதேபோல் 15 கிலோகிராம் வரையிலான ‘செக்கின்’ பயணப் பைகளை எடுத்துச் செல்லலாம்.

செலவுகளைக் குறைக்கும் நோக்கத்திலும் மலிவுக் கட்டண விமானச் சேவையில் மற்ற விமான நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாகவும் இந்த முடிவை ஏர் இந்தியா எடுத்துள்ளது.

விமானத் துறையில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகள் முக்கியமானவை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 16ஆம் தேதி முதல் ‘ஃபேர் கிளாஸ்’ விமானச் சீட்டுகளைப் பயணிகள் வாங்கலாம். அவர்களுக்குப் பயணத்தின்போது இலவசமாக டீ, காப்பி வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்தது.

‘ஃபேர் கிளாஸ்’ விமானச் சீட்டுகளை ஏர் இந்தியாவின் இணையத்தளம், செயலி, பயணச்சீட்டு அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா அதன் வருவாயை அதிகரித்து லாபத்தைப் பெருக்க முயற்சி செய்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் 2.98 பில்லியன் வெள்ளி நட்டத்தை ஏர் இந்தியா எதிர்நோக்கியது.

டாடா குழுமத்தின்கீழ் செயல்படும் ஏர் இந்தியா தனது செயல்பாடுகளை நிலையாக வைத்து, நட்டத்தைக் குறைத்து மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியா அதன் விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் புதிதாக வாங்கவுள்ள நூற்றுக்கணக்கான விமானங்களைக் கட்டம் கட்டமாகத் தருவிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்த கவனிப்பாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவுக்குப் போட்டி கொடுக்கும் நிறுவனமாக இண்டிகோ உள்ளது. தற்போது ஆகாசா ஏர் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

உள்நாட்டு விமானச் சந்தையில் ஏர் இந்தியா 24.7 விழுக்காட்டு இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் இண்டிகோ 65 விழுக்காட்டு இடத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்