லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல கோவில்கள் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டுக் கிடக்கின்றன. அந்தக் கோவில்கள் அனைத்தையும் திறக்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில், தவுலதாபாத் பகுதியில் உள்ள பழைமையான கோவிலில் வழிபாடு நடத்துவது குறித்து இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால், அந்தக் கோவில் கடந்த 44 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் உ.பி. அரசாங்கத்தின் முயற்சி காரணமாக அந்தக் கோயில், காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட அந்தக் கோவில் திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்பகுதியில் வாழும் அனைத்துத் தரப்பினரும் ஒரு மனதாக ஆதரவு அளித்ததால், எந்தவித எதிர்ப்பு மற்றும் அசம்பாவிதச் சம்பவங்களும் இன்றி கோவில் திறப்பு விழா நல்ல முறையில் திறக்கப்பட்டு, கொண்டாடப்பட்டது.
கோவிலுக்குள் சில சிலைகள் சேதமடைந்தும், சில சிலைகள் மாயமாகியும் இருப்பது தெரியவந்தது. கோவிலை மீண்டும் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர் நிர்வாகத்தினர். இந்நிலையில், விரைவில் தினசரி வழிபாடுகள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

