விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, அந்தரத்தில் தொங்கிய தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த 32 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து மதுரைக்குத் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) நள்ளிரவு புறப்பட்டது. அம்பாசமுத்திரம் அடுத்த மடப்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (35) பேருந்தை ஓட்டினார். இதில் 40 பேர் பயணம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் திங்கட்கிழமை அதிகாலை சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பேருந்து இரு பாலங்களுக்கு இடையே அந்தரத்தில் தொங்கியது. அதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயந்து கூச்சலிட்டனர்.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில், நெல்லை சிவசக்தி நகரைச் சேர்ந்த தாமோதரன் (18), மதுரை சக்திமோகன் (58), மகாதேவன் (49) உட்பட 32 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து காரணமாகச் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

