நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி சார்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசுத் திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்கான அந்த மிகப்பெரிய திருமண மண்டபத்தின் ஒரு நாள் (24 மணி நேரம்) வாடகையாக ரூ.1 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கான திருமணச் செலவை வெகுவாகக் குறைக்க தீர்மானித்த நெல்லூர் மாநகராட்சியினர், நெல்லூரில் ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான திருமண மண்டபத்தை ரூ.1.40 கோடி செலவில் கட்டி முடித்துள்ளனர்.
புதிய மண்டபத்தில் சுமார் 5,000 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்க முடியும்.
குளிர் சாதன அறைகள், பளிங்குத் தரைகள், பரந்த வாகன நிறுத்தும் இடங்கள் என அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குத் தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன.
திருமண மண்டபத்தை வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அமைச்சர் நாராயணா திறந்து வைக்கவுள்ளார்.
தனியார் திருமண மண்டபங்களின் வாடகை பல லட்ச ரூபாயாக அதிகரித்து உள்ளது. இடத்திற்குத் தகுந்தாற்போல் 24 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வாடகைக்கு விடப்படுகிறது. அத்துடன், மேடை அலங்காரம், முகப்பு அலங்காரம், சமையல் பாத்திரங்களுக்கு எனத் தனி வாடகையாக லட்சக்கணக்கில் செலவாகிறது.
அத்தகைய சொகுசு மண்டபங்களில் திருமணம் செய்ய நடுத்தரவர்க்கத்தினரே அஞ்சும் நிலையில், ஏழை எளிய மக்களால் இத்தகைய மண்டபங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத நிலை உள்ளது.
நெல்லூர் திருமண மண்டபம் பலருக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.


