புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தின் சுங்கத்தீர்வை கோரப்படாத ‘கிரீன் சேனலில்’ தடுத்து நிறுத்தப்பட்ட இந்தியப் பயணி ஒருவரிடமிருந்து ரூ.94 லட்சம் மதிப்பிலான சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட ‘பாடெக் பிலிப் அக்வாநாட்’ கைக்கடிகாரம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயிலிருந்து டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரிடம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அந்த ஆடம்பரக் கைக்கடிகாரம் இருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
‘மெட்டல் டிடெக்டர்’ கருவியிலிருந்து எழுந்த எச்சரிக்கை ஒலியைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் அந்தப் பயணியை வழிமறித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட அந்த ஆடம்பரக் கடிகாரத்தைக் கொண்டுவந்ததற்காக 1962ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற அந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) தகவல் வெளியிடப்பட்டது.
அந்தக் கடிகாரம் பழையது அல்லது பயன்படுத்தப்பட்டது என்பது மட்டுமே, அதைச் சுங்க வரியிலிருந்து தானாகவே விலக்கிவிடாது. அது சுங்க வரி இல்லாத தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருளாகக் கருதப்படுகிறதா அல்லது சுங்க வரி விதிக்கப்பட வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் பிரிவில் வருகிறதா என்பதே முக்கியமானது என இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
