கோல்கத்தா: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ரகசிய உடன்பாடு இருக்கலாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மம்தாவின் இந்தப் பேச்சு ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் இடமாற்றம்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்திற்கு மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய மம்தா, “தேர்தல் ஆணையத்திற்குத் தமிழகத்தின்மீது அப்படி என்ன ஓர் அளவற்ற பாசம்? காங்கிரசுக்கும் ஸ்டாலினுக்கும் தேர்தல் ஆணையத்துடன் ரகசியத் தொடர்பு இருக்கலாம் என்று நான் சந்தேகிக்கிறேன்,” என்று சொன்னார்.
நகாஷிபராவில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மம்தா, “மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முன்னதாக முயற்சி செய்து வந்தது.
“தற்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பல மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்திற்கு மாற்றப்படுகின்றனர்,” என்று சுட்டிக்காட்டியவர், “ஆணையத்திற்குத் தமிழகத்தின்மீது ஒரு நெருக்கம் இருக்கிறது. காங்கிரசுக்கும் ஸ்டாலினுக்கும் ஆணையத்துடன் ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம்,” என்று கூறினார்.
கூட்டணியில் சலசலப்பு
‘இணிடியா’ கூட்டணியில் மம்தாவும் ஸ்டாலினும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தனர். பல தருணங்களில் கூட்டணியை வழிநடத்த ஸ்டாலின் அல்லது மம்தாவையே மற்றக் கட்சிகள் முன்மொழிந்தன.
இத்தகைய சூழலில், மம்தாவின் இந்த நேரடித் தாக்குதல் கூட்டணிக்குள் வெளிப்படையான விரிசலை உண்டாக்கியுள்ளது.
பிரதமர் மோடிக்குக் கண்டனம்
அதே மேடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் மம்தா கடுமையாகச் சாடினார். கோல்கத்தாவை தாக்கப்போவதாக பாகிஸ்தான் விடுத்த மிரட்டல் குறித்துப் பிரதமர் மௌனமாக இருக்கிறார் என்றும் அதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தினார்.

