போபால்: மத்தியப் பிரதேசத்தில் சிங்க்ராவ்லி மாவட்டத்தில் உள்ள மகாராஷ்டிர வங்கிக் கிளையில், கொள்ளையர் ஐவர் துப்பாக்கியுடன் நுழைந்து, வங்கி அதிகாரிகளைத் துப்பாக்கி முனையில், அச்சுறுத்தி கிட்டத்தட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரொக்கத்தையும் கொள்ளை அடித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வங்கிக் கிளைக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) பிற்பகலில் இரண்டு பேர் வாடிக்கையாளர்கள்போல வந்தனர். அவர்கள் உள்ளே வந்தவுடன் அடுத்ததாக மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்ததும் ஐந்து பேரும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்து மேல்நோக்கிச் சுட்டு வாடிக்கையாளர்களை அச்சுறுத்தினர். அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கி மேலாளரை அழைத்து லாக்கர் சாவிகளைக் கேட்டனர்.
அக்கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து இருபதே நிமிடங்களில் பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
9 முதல் 10 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக சிங்க்ராவ்லி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பி. மணீஷ் காத்ரி கூறியுள்ளார்.
கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் முகக் கவசம் அணியாததால் அவர்களை விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


