மதுக்கூடங்களை மூடும் இந்திய மாநிலம்

மதுக்கூடங்களை மூடும் இந்திய மாநிலம்

1 mins read
ba963b5d-2a95-4b4d-91bd-2910cc91be63
பெண்களுக்குப் பெரும் தொல்லையாக விளங்குவதால் மதுக்கூடங்கள் மூடப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். படம்: இந்திய ஊடகம் -

மக்கள் மது அருந்துவதை ஊக்குவிக்கக்கூடாது எனும் நோக்கத்தில் புதிய மதுக்கொள்கையை அமல்படுத்தவிருக்கிறது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம்.

அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அம்மாநிலத்தில் மதுக்கடைகளை ஒட்டி அமைந்துள்ள மதுக்கூடங்கள் (bar) அனைத்தும் மூடப்படும்.

பெண்களுக்குப் பெரும் தொல்லையாக விளங்குவதால் அவை மூடப்படுவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

மது குடிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்ற அரசாங்கத்தினுடைய கொள்கையின் ஒரு பகுதியாகவும் இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.

மதுக்கூடங்களில் மது குடித்தபின் பலரும் தாறுமாறாகக் கண்டபடி நடந்துகொள்வதுடன், பெண்களுக்குப் பாலியல் தொந்தரவும் அளிப்பதாக முதல்வர் குறிப்பிட்டார்.

ஆண்கள் குடித்துவிட்டு, கொடுக்கும் தொல்லைகளில் இருந்து பெண்களைக் காக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

ஆடவர் ஒருவர் மது குடிக்க விரும்பினால், கடையில் மதுப்புட்டியை வாங்கியபின் அதனை வீட்டிற்குக் கொண்டுபோய் குடிக்குமாறு முதல்வர் சௌகான் அறிவுறுத்தினார்.

அப்படி மதுப்புட்டியுடன் அல்லது மதுபோதையில் வரும் ஆண்களைப் பெண்கள் தடிகொண்டு வரவேற்க வேண்டும் என்றும் அவர் வேடிக்கையாகச் சொன்னார்.

அத்துடன், மதுப்பழக்கத்தைக் கைவிடும்படி பிள்ளைகள் தங்கள் தந்தைமார்களிடம் வலியுறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.