போபால்: இனி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
தலைநகர் போபாலில் அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 25) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அம்மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அவ்வறிக்கையில், ”கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் விதிமுறையை நீக்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மாநில அமைச்சர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கும் சலுகைகளுக்குமான வரியை மாநில அரசு செலுத்த வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.
“இனி, மத்தியப் பிரதேச அமைச்சர்கள் தங்களது ஊதியம் மற்றும் அகவிலைப்படிகளுக்கான வரியை தாங்களே செலுத்த வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
முதல்வர் மோகன் யாதவின் பரிந்துரைப்படி, இதன் தொடர்பில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்தியப் பிரதேச ஊரக நிர்வாகத்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

