நாய் வளர்த்தால் வரிவிதிக்கும் இந்திய நகரம்

1 mins read
457c3186-4bab-4271-b87b-48cfb0031c18
புதுடெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி நடந்த செல்லப்பிராணி கண்காட்சியில் நாய்க்குட்டியைப் பராமரிக்கும் ஒருவர். படம்: ஏஎஃப்பி -

போபால்: செல்லப் பிராணியாக நாய் வளர்ப்போருக்கு வரிவிதிக்க முடிவுசெய்துள்ளது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் நகராட்சி.

நகரின் தூய்மைக்காகவும் நகரவாசிகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவிற்கு சாகர் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் 40 பேரும் ஆதரவு தெரிவித்தனர்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாகர் நகரத் தெருக்களில் நடமாட முடியாதபடி நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இன்னொருபக்கம் வளர்ப்பு நாய்கள் பொது இடங்களில் அசிங்கம் செய்வதாலும் நகராட்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

"வளர்ப்பு நாய்களும் தெருநாய்களாலும் நகர் முழுக்க அசிங்கம் செய்து வருகின்றன என்றும் நாய்க்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். நாய் வளர்ப்பிற்காக வரிவிதித்துள்ள மற்ற நகரங்களில் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி ஆராய்வோம்," என்று சாகர் நகராட்சி மன்றத் தலைவர் விருந்தாவன் அதிர்வார் கூறினார்.

இந்நிலையில், இந்த வரிவிதிப்பு நியாயமற்ற செயல் என்று நாய் வளர்ப்போர் கொந்தளித்துள்ளனர்.

அத்துடன், நாய் வளர்ப்போர் அதுகுறித்துப் பதிவுசெய்திருக்க வேண்டும்; நாய்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாய் வளர்ப்பிற்காக வரிவிதிக்கவிருக்கும் முதல் நகரம் சாகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.