போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

2 mins read
8fe2b37d-ccda-4a46-90c6-3451155b8d0c
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறைக்கு தெரியாதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை குடிசைவாசிகளை அப்புறப்படுத்தியதை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ‘பெண்ணுரிமை இயக்கம்’ அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘‘குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவொரு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை’’ என புகார் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை 2018ஆம் ஆண்டு நியமித்தது.

வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையில் “அந்தக் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது. சிறுவர்களுக்கும்கூட கஞ்சா தாராளமாக கிடைக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அந்தப் பகுதிகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டுமென வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கை கோடிகாட்டியிருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்றும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறைக்கு தெரியுமா, தெரியாதா என வினவினர்.

மேலும், போதை நடமாட்டத்தால் பள்ளிக்குழந்தைகள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு உள்ளதா அல்லது சுதந்திரமான வேறு ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கலாமா என்றும் காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு தமிழகத்தில் போதைப் பொருள் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் வழக்கு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்