மதுரா: இந்தியாவில் இனி சிறைவாசிகளும் கிரிக்கெட் விளையாடி மகிழலாம்.
சிறைவாசிகளுக்கு என ‘ஜெயில் பிரீமியர் லீக்’ என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் போட்டியை நடத்தியுள்ளது உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா சிறைப்பிரிவு.
மதுரா சிறையில் உள்ள கைதிகளில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ள கைதிகளைத் தேர்வு செய்து, எட்டு அணிகளாகப் பிரித்து, இந்தப் போட்டியை நடத்தியுள்ளனர்.
மொத்தம் 16 ஆட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டித் தொடரின் முடிவில் வெற்றி பெற்ற அணிக்கும், அதிக ஓட்டங்கள், விக்கெட்டுகள் எனப் பல்வேறு அம்சங்களில் சாதித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறைவாசிகளின் உடல்நலத்தை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைப் போக்கவும் இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் கைகொடுக்கும் என்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.
குறிப்பாக, பிணை கிடைக்காத அல்லது குடும்பத்தினரை நீண்ட நாள்கள் சந்திக்காத சிறைவாசிகள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் இதற்குத் தீர்வு காணும் விதமாக, விளையாட்டு என்பது ஒரு மருந்து என்பதை உணர்த்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன என்றும் மதுரா சிறைக் கண்காணிப்பாளர் அன்ஷும் கார்க் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மட்டுமல்லாமல், கைப்பந்து, பேட்மின்டன் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் யோகா, கட்டுரை எழுதுதல், வினாடி வினா ஆகிய போட்டிகளையும் நடத்த சிறைப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

