புதுடெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான, இதர பணிகளில் 26 விழுக்காடு முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இது தொடர்பாக திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், இத்தகவலைத் தெரிவித்தார்.
ஜப்பான் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் என்றார் அவர்.
எய்ம்ஸ் கட்டுமானத் திட்ட நடவடிக்கைகளுக்கான நிதியை வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். எனினும், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பேசுபொருளாக மாறியது.