புதுடெல்லி: மகா கும்பமேளாவில் காணாமல் போன 13,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
இதற்காக உத்தரப்பிரதேச மாநில அரசு ‘கோயா பாயா’ (தொலைந்தவர்கள் - கண்டுபிடிக்கப்பட்டவர்கள்) என்ற சிறப்புப் பிரிவை உருவாக்கி இருந்தது.
கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜின் ரயில் நிலையம் உட்பட பத்து முக்கியமான பகுதிகளில் இந்தப் பிரிவு முற்றிலும் மின்னிலக்க முறையில் செயல்படுகிறது.
மேலுமம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“திரிவேணி சங்கம கரையில் இப்பிரிவினர் 1,800 கேமராக்களைப் பொருத்தி ஏஐ முறையில் காணாமல் போனவர்களின் முகங்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
“மேலும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள், படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. திரிவேணி சங்கமத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.
“தவிர மாநில காவல்துறை ஒலிப்பெருக்கிகளிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
“இந்த வகையில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது முதல் இதுவரை சுமார் 23 மாநிலங்களைச் சேர்ந்த 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களில் 64 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்,” என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காணாமல் போனவர்கள் மீட்கப்பட்ட பிறகு, அவர்களது குடும்பத்தார் வந்து அழைத்துச் செல்லும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த முகாம்களில் அனைவருக்கும் உணவு, கம்பளி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளையும் செய்திருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.